உலக சுற்றுச்சூழல் தினம் இன்று… சுற்றுச் சூழலை பாதுகாக்க உறுதி ஏற்போம்.

image

உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டு தோறும் ஜுன் 5–ந் தேதி கடைப் பிடிக்கப்படுகின்றது.

இந்த தினமானது, 1972–ம் ஆண்டு ஐக்கியநாட்டு சபையால் அறிவிக்கப்பட்டு வருடந்தோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐ.நா. சபை “சட்டத்திற்கு முரணான வன வர்த்தகத்திற்கு எதிராக போராடுதல்” என்ற கருத்தை மையப்படுத்தி உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாட வலியுறுத்தியுள்ளது. இயற்கையின் வளமைக்கு வனமும், அதில் உள்ள உயிர்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், அதன் அத்தியாவசியத்தையும் உணர்த்த ஒரு மாபெரும் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதன் நோக்கமே இவ்வருட சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய அம்சமாகும்.
மனிதனின் அதீத ஆசைகளுக்காக வனங்களில் உள்ள விலங்குகள் அழிக்கப்படுகின்றன. யானை தந்தத்திற்காகவும், புலி தோலுக்காகவும் கொல்லப்படுகிறது. பல விலங்குகளை உணவுக்காகவும், மருந்துக்காகவும், ஆடம்பரத்தை பறைசாற்றும் பொருட்களுக்காகவும் அழிக்கிறோம். கடலில் உள்ள உயிரினங்களையும், மருத்துவ குணம் கொண்ட தாவரங்களையும்கூட விட்டுவைப்பதில்லை. நறுமண தாவரங்களும் சுயலாபத்திற்காக விற்பனையாக்கப்படுகின்றன.
உலக சந்தைகளில் மறைமுகமாக அதிக லாபத்திற்கு விற்கும் சட்டத்திற்கு முரணான தொழிலே இந்த வன வர்த்தகம். ஒவ்வொரு வருடமும் சுமார் 160 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த சட்டத்திற்கு விரோதமான வன வர்த்தகம் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்தியா உலக அளவில் 8 சதவீதம் பல்லுயிர் பெருக்கத்தன்மை (Biodiversity)   கொண்ட சிறப்பு மிக்க நாடாகும். இதில் 1,26,188 அரிய வகை பல்லுயிர்கள் இன்று வரை கண்டறியப்பட்டுள்ளன. 17,500 தாவர வகைகளும், 350 பாலூட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது சூழ்நிலை மாறுகிறது. மனிதனின் அதி நவீன வளர்ச்சியினாலும், பலவகையான தேவைகளினாலும் வனங்களில் உள்ள பல்லுயிர்கள் உணவுக்காகவும், மருந்து, உற்பத்தி மற்றும் அலங்கார பொருட்களுக்காகவும் சூறையாடப்படுகின்றன. அதனால் இன்று குறிப்பிடத்தக்க மாற்றம் இவற்றில் ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்.
இதனால் இந்தியாவில் மட்டும் 89 சதவீத பறவை வகைகளும், 83 சதவீத பாலூட்டிகளும், 91 சதவீத தாவர வகைகளும் அழிந்திருக்கின்றன. மேலும் உலக அளவில் ஒரு வருடத்தில் மட்டும் 1.5 மில்லியன் பறவைகளும், 100 மில்லியன் கடல் உயிரிகளும், 4,40,000 டன் நோய் தடுக்கும் தாவரங்களும் அழிகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுமார் 40 சதவீத பல்லுயிர்கள் உலக அளவில் மறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற துரோக செயல்களினால் நாம் நமக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
* ஒரு நாட்டினுடைய வளர்ச்சியானது அந்நாட்டின் வன வளத்தை பொருத்தே அமைகிறது. ஏனென்றால் வன உயிர்கள் அழியும்போது, கால சூழ்நிலையிலும், சுற்றுச் சூழலிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு மோசமான இடர்கள் தோன்றக்கூடும்.
*அப்போது இயற்கையில் சமச்சீரின்மை (Ecological Imbalance) தோன்றும். வனத்தில் உள்ள உயிர்கள் அழியும்போது அதைச் சார்ந்து வாழும் மற்ற உயிர்கள் உணவு இல்லாமல் அதன் உணவு வலையில் (Food Web) மாற்றம் ஏற்பட்டு மேலும் பல வகை உயிர்கள் அழிவதற்கு அது காரணமாகிவிடும்.
*காற்றையும் (Oxygen )மற்றும் தண்ணீரையும் அதிகமாக சுத்தப்படுத்தி தரும் தன்மை வனங்களில் உள்ள மரங்களுக்குத் தான் உண்டு. அந்த மரங்கள் அழிக்கப்படும்போது, சுற்றுச்சூழலுக்கு தேவையான சுத்தமான காற்றும், தண்ணீரும் கிடைப்பது கடினமாகிவிடும்.
*ஒரு சில வகை பறவைகள், விலங்குகள் இயற்கையிலேயே சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துரைக்கும் கருவிகளாக செயல்படும் சிறப்புத்தன்மை பெற்றுள்ளன. அவைகள் அழிந்துபோகும்போது, அத்தகைய மாற்றங்களை அறிய கிடைக்கும் வாய்ப்பை நாம் இழந்துவிடுகிறோம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் நமக்கு தெரியாமலே போய்விடக் கூடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எவ்வாறு நம் நாட்டினுடைய வன வளத்தையும், வன உயிர்களையும் இந்த சட்டத்திற்கு முரணான வன வர்த்தகத்
திடமிருந்து பாதுகாப்பது என்பதையும், அதனால் எவ்வாறு சிறப்பான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என்பதையும் கீழே காண்போம்.
* சட்டத்திற்கு முரணான வன வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களை வாங்குவதை தவிர்த்தல்.
*வனங்களிலுள்ள மரங்களை வெட்டுவதையும், அதில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதையும் அறவே ஒழித்தல்.
*அழியும் தருவாயில் (Endangered spices) உள்ள உயிரினங்களை புதிய முறைகொண்டு பாதுகாத்தல்.
*வன விலங்குகளை பாதுகாப்பதற்காக சிறப்பான திட்டங்களை தயாரித்து செயல்படுத்துதல். (யானை பாதுகாப்பு திட்டம், புலி பாதுகாப்பு திட்டம் போன்றவை).
* சட்டத்துக்கு புறம்பாக வன வர்த்தகத்தில் ஈடுபடுவோரை கடுமையான சட்ட விதிகளுக்கு உட்படுத்துதல்.
*அரசும், அரசு சாரா நிறுவனங்களும் இணைந்து இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
*வன பாதுகாப்பை அதிகரித்தல்.
*இதைப்பற்றிய கல்வியை ஆரம்ப பள்ளியில் இருந்து கற்றுக்கொடுத்தல்.
இத்தகைய முயற்சிகள் மூலம் நமது நாட்டின் பொக்கிஷமான வனங்களையும், அதிலுள்ள உயிர்களையும் காப்பாற்றலாம். சட்டத்திற்கு முரணான முயற்சிகளில் இருந்து அவைகளை பாதுகாக்கலாம். பாதுகாப்பதன் மூலம் நம்முடைய சுற்றுச் சூழலை சிறப்பாக பேணலாம். அப்படி பேண வேண்டும் என்பதுதான் உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கமாகும். நாட்டுக்காக, நமக்காக இந்த நல்லநோக்கம் நிறைவேற உறுதி எடுத்துக்கொள்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: